தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 8 பேர் கைது!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட மொத்தம் 8 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு இம்பால் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட இயக்கமான காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 6 பேரை நேற்று (பிப்.21) அங்குள்ள கௌட்ருக் மக்கா தேவாலயத்தில் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கிழக்கு இம்பால் மாவட்டத்தின் சேக்மாய், இரில்பங், கொய்ரெஙய் மற்றும் பட்சோய் ஆகிய பகுதிகளில் மணல் லாரி ஓட்டுநர்களிடம் மிரட்டி பணம் பறித்த ஜி5 அமைப்பைச் சேர்ந்த நிங்தௌஜம் யம்பா சிங் (வயது 43) மற்றும் உஷம் நேதாஜி சிங் (35) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: முதல்வருக்கு கொலை மிரட்டல்!
இந்நிலையில், அம்மாநிலத்தின் காக்சிங் மற்றும் காங்போக்பீ மாவட்டத்தில் சுமார் 2 துப்பாக்கிகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்த 12 துப்பாக்கிகளை காக்சிங் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், தேங்நோவ்பால் மாவட்டத்தின் மோரே காவல் நிலையக் கட்டுப்பாட்டிலுள்ள மாவோஜங் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 22 கிலோ, 7 கிலோ, 4கிலோ மற்றும் 6 கிலோ ஆகிய அளவுகளிலான ஐ.ஈ.டி எனும் நவீன வெடி குண்டுகள் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.