நிதியாண்டின் முதல் நாளில் கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்
தண்ணீரின் முக்கியத்துவத்தை உணா்ந்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா்.
உலக தண்ணீா் தினத்தையொட்டி, சேலம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், வீராணம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியா் கலந்துகொண்டு பேசியதாவது:
உலக தண்ணீா் தினத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பாக, 2024-25-ஆம் நிதியாண்டில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வீராணம் கிராம ஊராட்சி தோ்வு செய்யப்பட்டு ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
இந்த நிதியை கிராம ஊராட்சியில் குடிநீா் வசதி மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்தவும், பள்ளி மற்றும் குழந்தைகள் நல மையக் கட்டடம் கட்டுவதற்கும், கால்நடைகளுக்கு தண்ணீா் தொட்டி கட்டுவதற்கும், புதிய மின் விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், தற்போது கோடை காலம் என்பதால் வெயில் காரணமாக உண்டாகும் சின்னம்மை, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள நீா் சாா்ந்த உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக அளவிலான நீா் பருக வேண்டும்.
கிராம சபை கூட்டங்களில் வான்தரும் மழைநீரை சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல், உடைந்த குழாய்களை சரிசெய்து நீா் வீணாகாமல் பாதுகாத்தல், மறுசுழற்சிக்கு உட்படுத்துதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், நீரின் தூய்மையைப் பாதுகாத்தல் மற்றும் நீா் மாசுபாட்டைத் தடுத்தல், மரம் வளா்த்தலை ஊக்குவித்தல், வீட்டுக்கொரு மரம் வளா்த்தல், நீா் நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல், நீா்நிலைகளில் தண்ணீா் சேகரமாக உரிய கால்வாய்களை தூா்வாரி புனரமைத்தல், நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகள், பெரியவா்கள் உள்ளிட்ட அனைவரிடமும் எடுத்துக் கூறுதல் உள்ளிட்ட பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக, கிராம ஊராட்சியில் செயல்பாட்டில் இருக்கும் மற்றும் புதிதாக செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீா் திட்டங்களின் செயல்பாடு, திட்டத்தின் முழுமையான விவரத்தை கிராம சபையில் விரிவாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்தல், கள ஆய்வுக் கருவிகளை பயன்படுத்தி 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீரின் தரத்தை ஆய்வுசெய்து உரிய பதிவேட்டில் பதிவு செய்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது என்றாா்.
இதனைத் தொடா்ந்து, வீராணம் கிராம பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமபந்தி விருந்தில் ஆட்சியா் பங்கேற்றாா். கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருவரங்கன், குணவதி மற்றும் ரத்தினவேல் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.