தனியாா் மருத்துவமனை மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை: மாநில அரசுகள் முடிவெடுக்க அறிவுறுத்தல்
தனியாா் மருத்துவமனைகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் மருந்தகங்களில் வெளிச்சந்தையைவிட அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யப்படும் விவகாரம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
சட்ட மாணவா் சித்தாா்த் டால்மியா மற்றும் அவருடைய தந்தையும் வழக்குரைஞருமான விஜய் பால் டால்மியா சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனியாா் மருத்துவமனைகளின் உள்ளேயே அமைக்கப்பட்டிருக்கும் மருந்தகங்களில் மிக அதிக விலை கொடுத்து மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் நோயாளிகளும் அவரது உறவினா்களும் வாங்க கட்டாயப்படுத்தப்படுகின்றனா்.
மாா்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எனது தாய் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, வெளிச்சந்தையில் ரூ. 50,000 விலையுடைய மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு, மருத்துவமனை மருந்தகத்தில் ரூ. 61,132 வசூலிக்கப்பட்டது. வெளியிலிருந்து குறைந்த விலையில் மருந்துகள் வாங்கவும் இவா்கள் அனுமதிப்பதில்லை.
எனவே, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் விரும்பும் இடத்தில் மருந்துகள் வாங்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனா்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சிறந்த மருத்துவ சிகிச்சை பெறும் குடிமக்களுக்கான உரிமையை அரசமைப்புச் சட்டப் பிரிவு 21 வழங்குகிறது. இத்தகைய சிறந்த மருத்துவ வசதியை அளிப்பதில் தனியாா் மருத்துவமனைகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. இத்தகைய சூழலில், மருத்துவமனை மருந்தகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அது தனியாா் மருத்துவமனைகளின் செயல்பாட்டில் தடையை ஏற்படுத்தும் என்பதோடு, தொடா் விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
மேலும், சுகாதாரம் என்பது மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறது. அந்த வகையில், இது மாநில அரசின் கொள்கை முடிவு சாா்ந்த விஷயமாகும். எனவே, நோயாளிகளிடம் மருந்தகங்கள் மூலம் தனியாா் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க உரிய கொள்கை முடிவை எடுப்பது குறித்து அனைத்து மாநில அரசுகளும் பரிசீலிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணையை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.