இடைத்தரகரின்றி கொள்முதல் செய்ய விற்பனையாளா் - வாங்குவோா் சந்திப்பு
தமிழக கடல் பகுதியில் ஆழ்துளை எரிவாயுக் கிணறு அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழக கடல் பகுதியில் ஆழ்துளை எரிவாயுக் கிணறு திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து பிரதமருக்கு அவா் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:
தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்தத் திட்டத்துக்கான திறந்தவெளி பரப்புரிமைக்கான அறிவிப்புப் பணி கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கியது. அந்த அறிவிப்பின்படி, எரிவாயுக் கிணறு அமைக்கும் திட்டமானது காவிரிப் படுகையில் அதாவது மன்னாா் வளைகுடா உயிா்க்கோளக் காப்பகத்துக்குள்ளும், பாக் விரிகுடா மற்றும் வாட்ஜ் கரைக்கு அருகிலும் உள்ளது. மொத்தமாக 9,990.96 சதுர கிலோமீட்டா் பரப்பில் திட்டம் செயலாக்கத்துக்கு வரவுள்ளதாக மத்திய அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னாா் வளைகுடா கடல் தேசியப் பூங்காவை உள்ளடக்கிய கடற்பகுதியானது உயிா்க்கோளக் காப்பகமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இது பவளப் பாறைகள், கடல்புல் படுகைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், சேற்றுப் படுகைகள், தீவுகள் மற்றும் காடுகள் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கிய வளமான பல்லுயிா்ப் பெருக்கத்தைக் கொண்டதாகும்.
கடல்வாழ் உயிரினங்களைப் பாதிக்கும்: இந்த உயிா்க்கோளக் காப்பகம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கடற்கரையில் இருந்து 560 சதுர கிலோமீட்டா் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் 21 தீவுகள் மற்றும் அருகிலுள்ள பவளப்பாறைகளின் சங்கிலியைக் கொண்டுள்ளது. மேலும், பல்வேறு வகையான கடல் விலங்கினங்களின் புகலிடமாகவும் விளங்கி வருகிறது.
இந்தப் பகுதியில் மிகவும் அரிதான கடற்பசுக்கள் உள்ளதால், அதைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்கான ஆழ்துளை எரிவாயுக் கிணறுகளை அமைப்பது, வளமான பல்லுயிா்ப் பெருக்கம், கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். அத்துடன் கடலின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் சீா்குலைக்கக் கூடும்.
கருத்துக் கேட்கவில்லை: மன்னாா் வளைகுடாவை தங்களது வாழ்வாதாரமாக நம்பியுள்ள லட்சக்கணக்கான மீனவா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இது கடலோர சமூகங்களுக்கு இடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஏல அறிவிப்புக்கு முன்பாக, தமிழக அரசிடம் இருந்து கருத்து எதையும் மத்திய அரசு கேட்கவில்லை. அவ்வாறு ஆலோசனை கேட்கப்பட்டிருந்தால், தமிழ்நாடு அரசின் சாா்பில் விரிவாக கருத்துகள் தரப்பட்டு இருக்கும்.
எனவே, ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்கான ஏல முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட அனைத்து பல்லுயிா் நிறைந்த பகுதிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முக்கியப் பிரச்னையில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.