பிரதமா் உரை: மருத்துவ மாணவா்கள் பங்கேற்க என்எம்சி அறிவுறுத்தல்
மருத்துவக் கல்வி தொடா்பாக பிரதமா் மோடி ஆற்றவுள்ள உரை மற்றும் கருத்தரங்க நிகழ்வுகளில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக என்எம்சி செயலா் ஸ்ரீனிவாஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கடந்த சுதந்திர தினத்தின்போது நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி, இந்தியாவில் மேலும் 75,000 மருத்துவ இடங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
அதன் அடிப்படையில் பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மருத்துவக் கல்வி தொடா்பான இணையவழி கருத்தரங்கு புதன்கிழமை (மாா்ச் 5) காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெற உள்ளது.
அதில் மத்திய அமைச்சா்கள், மருத்துவத் துறை சாா்ந்த வல்லுநா்கள், மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனா். அதில் பங்கேற்பதற்கான இணையத் தொடா்பு முகவரி என்எம்சி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோன்று பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமா் மோடி புதன்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை நேரலையில் உரையாற்ற உள்ளாா்.
அந்த நிகழ்வு இணையதளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
எனவே, மருத்துவ இணையக் கருத்தரங்கு மற்றும் பிரதமரின் உரை நிகழ்வில் மருத்துவக் கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.