திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் திருச்சியில் 28-ஆம் ஆண்டு திருக்குறள் திருவிழா: முன்பதிவு செய்ய மாணவர்களுக்கு அழைப்பு
திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில், 28-ஆவது ஆண்டு திருக்குறள் திருவிழா (திருக்குறள் ஒப்பித்தல் போட்டி) திருச்சியில் மே 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக, அறக்கட்டளையின் தலைவர் பூவை பி. தயாபரன் கூறியதாவது:
எதிர்கால சமுதாயம் நன்னெறியில் நடைபயிலவும், தற்கால மாணவர்கள் திருக்குறளை முழுமையாக கற்க வேண்டும் என்ற அடிப்படையிலும், திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் சார்பில், ஆண்டுதோறும் திருக்குறள் திருவிழா நடத்தப்படுகிறது. இதன்படி, திருச்சியில் மே 1-ஆம் தேதி 28-ஆவது ஆண்டு திருக்குறள் திருவிழா நடைபெறுகிறது.
இந்த விழாவில், திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். இவர்களில், 1,330 திருக்குறள்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் ரொக்கம், திருக்குறள் செல்வன், செல்வி விருது வழங்கப்படும். மொத்தம் 50 பேருக்கு இந்தப் பரிசுகள் வழங்கப்படும்.
திருக்குறள் திறனறித் தேர்வு: திருக்குறள் முழுமையையும் ஒப்பித்து திருமூலநாதன் அறக்கட்டளையிலும், தமிழக அரசு சார்பிலும் பரிசு பெற்றவர்கள் மட்டுமே திறனறித் தேர்வில் பங்கேற்கலாம். பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதும் வகையில் தேர்வு இருக்கும்.
சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள், தவறான விடைக்கு அரை மதிப்பெண் குறைக்கப்படும். 70 விழுக்காட்டுக்கு மேல் மதிப்பெண் பெறும் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ. ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
திருக்குறள் வழியில் வாழ்ந்து வரும் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, திருக்குறள் வழிச் சீலர் விருதும், ரூ.10 ஆயிரம் பண முடிப்பும் வழங்கப்படும்.
போட்டிகளில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லை. போட்டிக்கான விண்ணப்பத்தை https://sites.google.com/view/thirumulanathand/ என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை thirumulanathan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் பங்கேற்பாளரின் புலன எண் (வாட்ஸ்ஆப் எண்) குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
கூடுதல், விவரங்களுக்கு 97865-86992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.