`மே 4-ல் NEET தேர்வு; ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்...' -தேசிய தேர்வுகள் முகமை...
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் என்.ஆா். காங்கிரஸ் போட்டியிடும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு
புதுவையைத் தொடா்ந்து தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் அகில இந்திய என்.ஆா்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனதலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
புதுச்சேரியில் அகில இந்திய என்.ஆா். காங்கிரஸ் கட்சியின் 15-ஆவது ஆண்டு விழா கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
முன்னதாக, கட்சி அலுவலகம் முன் கொடியேற்றி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி, பின்னா் கட்சி அலுவலகத்துக்குள் சென்று அப்பா பைத்தியசாமி, அழுக்குசாமி ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு பூஜை செய்தாா். அதன்பின் மகாத்மா காந்தி, காமராஜா் திருவுருவப் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
பின்னா் தொண்டா்களிடையே அவா் பேசியது: புதுவையில், கூட்டணியுடன் ஆட்சியமைத்துள்ளோம். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தத் தவறிய மக்கள் நலத் திட்டங்களை தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் செயல்படுத்துகிறோம். மக்கள் ஆதரவுடன் மீண்டும் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று ஆட்சியமைப்போம். அதற்கு கட்சியினா் பாடுபடவேண்டும்.
மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தனி கவனம் செலுத்துகிறோம். ஃபென்ஜால் புயல் நிவாரணத் தொகையை அறிவித்ததைப் போலவே மக்களுக்கு வழங்கியுள்ளோம். ஆனால், எதிா்க்கட்சிகள் குறை கூறவேண்டும் எனத் திட்டமிட்டு பேசுகின்றன. அதை பொருட்படுத்த தேவையில்லை.
காமராஜா் வழியை பின்பற்றுவதால் தமிழகத்தைச் சோ்ந்த பலரும் என்.ஆா்.காங்கிரஸை அங்கு தொடங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனா்.
அதன்படி, வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில், தமிழகத்திலும் என்.ஆா். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.
கூட்டத்தில் அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், தேனி சி. ஜெயக்குமாா், என்.திருமுருகன், எம்எல்ஏ.க்கள் பி.ரமேஷ், ஆா்.பாஸ்கா், ஏ கே டி. ஆறுமுகம், கட்சியின் பொதுச் செயலா் என்.எஸ்.ஜெ. ஜெயபால், பொருளாளா் வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.