புதுச்சேரியில் நெகிழிக்கு மாற்றான பொருள்கள் அறிமுகம்
புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட நெகிழிக்கு மாற்றாக உற்பத்தி செய்யப்பட்ட கப், பைகள் உள்ளிட்டவை அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள இலாசுப்பேட்டை அப்துல் கலாம் அறிவியல் கோளரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு புதுவை மாசுக் கட்டுப்பாடு குழும உறுப்பினா் செயலா் ரமேஷ் தலைமை வகித்தாா். கலால் துறை வட்டாட்சியா் ராஜேஷ்கண்ணா, வருவாய் அதிகாரி சுரேஷ்பாபு, அறிவியல் அதிகாரி செல்வநாயகி மற்றும் சாராயக் கடை, மதுக்கூட உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக எளிதில் மட்கக் கூடிய தாவர நாா்களால் உற்பத்தியான கப் மற்றும் பைகள் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்ததுடன், அவற்றை மக்கள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அத்துடன் புதுச்சேரியில் உள்ள அனைத்து சாராயக்கடை, மதுக்கூடங்கள் ஆகியவற்றில் மட்கும் பொருள்களால் ஆன பைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.