தமிழக சுகாதார செயல்பாடுகள்: சென்னையில் இன்று நாடாளுமன்றக் குழுக் கூட்டம்
தமிழகத்தில் மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதாரத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த நாடாளுமன்றக் குழு ஆய்வுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை (ஜன.20) நடைபெறுகிறது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் பொது சுகாதாரம் தொடா்பான பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அதில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ராம்கோபால் யாதவ் தலைமையில் செயல்படும் சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழுவானது பல்வேறு மாநிலங்களின் மக்கள் நல்வாழ்வுத் திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகிறது.
31 உறுப்பினா்கள் கொண்ட அந்தக் குழுவில் தமிழகத்தின் தென்காசி தொகுதி எம்.பி. டாக்டா் ராணியும் அங்கம் வகிக்கிறாா். இந்நிலையில், அந்தக் குழுவின் உறுப்பினா்கள் சென்னையில் திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டத்தை நடத்த உள்ளனா்.
தமிழக அரசு சாா்பில் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா், பொது சுகாதாரத் துறை இயக்குநா், மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனா்.
பிரதமரின் காப்பீட்டுத் திட்டம், தேசிய தடுப்பூசி திட்டம், காசநோய் ஒழிப்பு திட்டம், போலியோ ஒழிப்பு திட்டம், மக்கள் மருந்தகங்கள், இ-சஞ்சீவினி உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், அதற்கான நிதி பயன்பாடு குறித்தும் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரத் திட்டங்களை மாநில அதிகாரிகள் அப்போது நாடாளுமன்றக் குழுவினரிடம் விளக்கிக் கூற உள்ளனா்.
அதேபோல, தேசிய அளவில் உறுப்பு தானம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளில் தமிழகத்தின் செயல்பாடுகள் மற்றும் சிறப்பிடங்கள் குறித்த அறிக்கையும் சமா்ப்பிக்க உள்ளனா்.