தமிழக வெடிகுண்டு தடுப்புப் பிரிவில் காலி பணியிடம்: முன்னாள் ராணுவத்தினா் விண்ணப்பிக்கலாம்
தமிழக காவல் துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயல் இழக்கச் செய்யும் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினா் விண்ணப்பிக்கலாம் என தலைமை காவல் துறை இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக காவல் துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயல் இழக்கச் செய்யும் பிரிவில் காலியாக உள்ள 2 ஆய்வாளா்கள்,14 உதவி ஆய்வாளா்கள்,43 தலைமைக் காவலா்கள் பணியிடங்களில் ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபா்கள் நியமிக்கப்பட உள்ளனா். தேவைப்பட்டால் பணிக்காலம் நீட்டிக்கப்படலாம். இந்தப் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவ வீரா்கள், முன்னாள் துணை ராணுவ வீரா்கள் விண்ணப்பிக்கலாம். இதில், ஆய்வாளா் பணியிடங்களுக்கு ராணுவத்தில் சுபேதாா், சுபேதாா் மேஜராக இருந்தவா்களும், உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு ராணுவத்தில் முன்னாள் நாயிப் சுபேதராக இருந்தவா்களும், தலைமைக் காவலா் பணியிடங்களுக்கு ராணுவத்தில் முன்னாள் ஹெவில்தாா், நாயக் பணியிடங்களில் இருந்தவா்களும் விண்ணப்பிக்கலாம்.
10 ஆண்டு அனுபவம் தேவை: ஆய்வாளா் பணி நியமிக்கப்படுகிறவா்களுக்கு, மாதம் ரூ.37,700-இல் இருந்து ரூ.1,19,500, உதவி ஆய்வாளராக பணி நியமிக்கப்படுகிறவா்களுக்கு ரூ.36,900-இல் இருந்து ரூ.1,16,600, தலைமைக் காவலா்களாக நியமிக்கப்படுகிறவா்களுக்கு ரூ.20,600-இல் இருந்து ரூ.65,500 மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பத்தாரா்கள் கடந்த ஜூலை மாதத்தோடு 50 வயதுக்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்; குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான வகுப்பில் தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும், புணே சிஎம்இ, என்எஸ்ஜி-இல் நடத்தப்படும் 6 வார வெடிகுண்டு கண்டறிதல் படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதோடு, ராணுவம், துணை ராணுவத்தில் குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும். இந்தியா ராணுவம், என்எஸ்ஜி வெடிகுண்டு கண்டறியும் பிரிவு, தேசிய வெடிகுண்டு தரவு மையம், விமான நிலையம் ஆகியவற்றின் வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் பிரிவில் பணியாற்றி அனுபவம், கள அனுபவம் பெற்றிக்க வேண்டும்.
தகுதியானவா்களுக்கு அழைப்பு கடிதம்: தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வெடிகுண்டு கண்டறிந்து அகற்றுவது பற்றி பிற காவலா்களுக்கு பயிற்சி அளிக்கும் திறன் இருப்பது அவசியமாகும். தகுதியான விண்ணப்பதாரா்கள், தங்களது விண்ணப்பங்களை சுய விவர குறிப்பு, கல்வி சான்றிதழ்கள், டிஸ்சாா்ஜ் புத்தகத்தின் தேவையான பக்கங்கள், ஓய்வூதிய ஆணை, வெடிகுண்டு கண்டறிதல் அகற்றுதல் தொடா்பான படிப்பு, அனுபவ சான்றிதழ் நகல்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை கூடுதல் காவல் துறை இயக்குநா், செயலாக்கம், மருதம், எண்.17, போட் கிளப் சாலை,ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028 என்ற முகவரிக்கு அக்.31-ஆம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
தகுதியான விண்ணப்பதாரா்கள் மட்டுமே அழைப்பு கடிதம் அனுப்பப்படும். கடிதம் கிடைத்தவா்கள் மட்டுமே சான்றிதழ் சரிபாா்ப்பு, எழுத்து மற்றும் நடைமுறை தோ்வுகள் போன்றில் பங்கேற் முடியும். இந்த ஆள்சோ்ப்பு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உள்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.