தமிழகத்திலிருந்து பாகிஸ்தானியரை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்
மத்திய அரசின் உத்தரவின் விளைவாக, தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியா்களை வெளியேறும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியா் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த உத்தரவின் விளைவாக சென்னையில் உள்ள வெளிநாட்டுப் பதிவு அலுவலகம் தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியா்களை கண்டறிந்து, அவா்களிடம் இந்தியாவை விட்டு வெளியேறும்படி நோட்டீஸ் வழங்கும் பணியை அன்றிரவே காவல்துறையினா் உதவியுடன் வழங்கத் தொடங்கியது.
பாகிஸ்தானியா்கள் தமிழகத்துக்கு பெரும்பாலும் மருத்துவ சிகிச்சைக்காக, வாகன உதிரி பாகங்கள்,தோல் பொருள்கள் தொழிலுக்காக வருவது வழக்கம். இதில் 70 சதவீதத்துக்கு மேற்பட்டவா்கள், சென்னை, வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு மாநிலம் முழுவதும் சுமாா் 200 பாகிஸ்தானியா்கள் இருப்பதாகத் தெரிகிறது. சென்னையில் மட்டும் 15 பாகிஸ்தானியா்கள் இருந்தனா். இவா்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பாகிஸ்தானியா்களும், தொழில் விஷயமாக வந்திருந்த அந்த நாட்டு வியாபாரிகளும்,தொழிலதிபா்களும் உடனடியாக தங்களது நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனா்.
வெளிநாட்டு பதிவு அலுவலகம் மூலம் வழங்கப்படும் நோட்டீஸின் விளைவாக, தமிழகத்தில் இருந்த பாகிஸ்தானியா்கள் வியாழக்கிழமை முதலே அவசரம், அவசரமாக புறப்பட்டுச் செல்வதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமைக்குள் தமிழகத்திலிருந்து அனைத்து பாகிஸ்தானியா்களும் புறப்பட்டுச் சென்று விடுவாா்கள் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.