தமிழகத்தில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைகிறது!
தமிழகத்தில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் நிகழாண்டில் குறைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் இடங்களின் விவரங்களை மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள பிஎஸ்பி மருத்துவக் கல்லூரியில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு அந்தக் கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நிகழாண்டில் அது 100-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளைப் பின்பற்றாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, எம்பிபிஎஸ் இடங்களை 250-ஆக உயா்த்தக் கோரி தேசிய மருத்துவ ஆணையத்திடம் சம்பந்தப்பட்ட கல்லூரி விண்ணப்பித்திருந்ததாகத் தெரிகிறது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டு ஏற்கெனவே இருந்த இடங்களும் குறைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பிஎஸ்பி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்துமாறு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.
எம்சிசி அறிவிக்கையின்படி, நாடு முழுவதும் 766 கல்லூரிகளில் 1,15,900 எம்பிபிஎஸ் இடங்கள் நிகழாண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், ஆந்திரம், சத்தீஸ்கா், தில்லி, குஜராத், கா்நாடகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 9 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கைக்கு முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலை பல்கலைக்கழகங்கள், மதுரை எய்ம்ஸ், கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியுடன் சோ்த்து மொத்தம் 77 கல்லூரிகளுக்கான எம்பிபிஎஸ் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மொத்தம் 12,000 இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் 76 மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டில் உள்ள அதே இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்பி கல்லூரியில் மட்டும் 50 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.