``இந்தியாவிற்கு உதவ எந்த நாடும் வரவில்லையே ஏன்?'' - மத்திய அரசிடம் கார்கே அடுக்க...
தமிழகத்தில் 7 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் புதன்கிழமை (மே 21) முதல் ஏழு நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே மே 24-ஆம் தேதி தொடங்குவதற்கு சாதகமான சூழல்கள் உள்ள நிலையில், தமிழகத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திரம்- வடதமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (மே 21) முதல் மே 27-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 21-இல் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 120 மி.மீ., அரக்கோணம் (ராணிப்பேட்டை), டேனிஷ்பேட்டை (சேலம்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) - தலா 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வெப்பம் அதிகரிக்கும்: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை புதன்கிழமை (மே 21) இயல்பைவிட சற்று குறைவாக இருக்கும். மே 22 முதல் மே 24-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.