விவசாய குறைதீர்க் கூட்டத்துக்கு மட்டம்போடும் அதிகாரிகள்; `எங்களுடன் வருவரா முதல்...
தமிழகத்தில் ஆக.28 வரை வெப்பம் அதிகரிக்கும்!
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.25) முதல் ஆக.28-ஆம் தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஆக.25) முதல் ஆக.28-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.25) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மிதமான மழை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (ஆக.25) முதல் ஆக.30-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: திங்கள், செவ்வாய் (ஆக.25, 26) ஆகிய இரு நாள்கள் தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.