டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு! இங்கிலாந்துக்குப் பின் இந்திய...
தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்ற இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்
தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் கொடிக் கம்பங்களை அகற்ற இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர துறைகளுக்குச் சொந்தமான பொது இடங்கள் மற்றும் நிலங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும் ஜனவரி 27ஆம் தேதியில் இருந்து 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது.
மேலும் அரசு நிலங்களில், நிரந்தரமாக புதிய கொடிக் கம்பங்கள் அமைப்பதற்கு அரசு அலுவலர்கள் இனி அனுமதி வழங்கக் கூடாது எனவும் தெரிவித்திருந்தது.
நீதிமன்றம் உத்தரவிட்டு, 12 வாரங்கள் கெடு முடிவடைந்த போதிலும், பொது இடங்களில் வைக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் தற்போது வரை அகற்றப்படாமல் உள்ளன.
இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல் எனவும், எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்புக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மீதான விசாரணை இன்று(ஆக. 25) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், “அரசியல் கட்சிகள் தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்த உரிமையுள்ள நிலையில், அடையாளங்களை பொது வெளியில் காட்சிப்படுத்த தடை விதிப்பது அதன் நோக்கத்தையே சீர்குலைத்து விடும்” என்று தெரிவித்தனர்.
மேலும், தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க: காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!