தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்தன: டிஜிபி அலுவலகம் தகவல்
தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்துள்ளன என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக டிஜிபி அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் கொலை, கொலை முயற்சி, கொலையாகாத மரணம், காயம், கொடுங்காயம் தொடா்பாக 49,286 வழக்குகள் பதிவாகின. ஆனால் 2024-ஆம் ஆண்டில் இந்த வகை வழக்குகள் 31,497-ஆக பதிவாகின. இரு ஆண்டுகளையும் ஒப்பிடும்போது 2024-ஆம் ஆண்டில் 17,789 வழக்குகள் குறைந்துள்ளன. அதாவது 36.12 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளன. இதில் முக்கியமாக கொலை குற்ற வழக்குகள் 6.8 சதவீதம் குறைந்துள்ளன. அதேபோன்று, 2023-இல் 1,305 கலவர வழக்குகள் பதிவாகின. 2024-இல் 1,229 வழக்குகள் மட்டுமே பதிவாகின. இது 2023-ஆம் ஆண்டைவிட 5.8 சதவீதம் குறைவாகும்.
திருட்டுக்கள் குறைந்தன: 2023-இல் பதிவான ஆதாயக் கொலை வழக்குகளின் எண்ணிக்கை 83-ஆக இருந்தது. 2024-இல் 75 வழக்குகளாகக் குறைந்தன.
இதேபோல், 2023-இல் பதிவான கூட்டுக்கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 133-ஆகவும், 2024-இல் 110 வழக்குகளாகவும் குறைந்துள்ளன. 2023-இல் பதிவான கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 2,212-ஆகவும், 2024-இல் 1,839-ஆகவும் இருக்கின்றன.
2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024-இல் கூட்டுக்கொள்ளை, கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 17 சதவீதமாக குறைந்துள்ளன.
இதேபோல 2023-இல் 17,788 திருட்டு வழக்குகள் பதிவாகின. 2024-இல் திருட்டு வழக்குகளின் எண்ணிக்கை 15,892 வழக்குகளே பதிவாகின. 2 ஆண்டுகளிலும் நடைபெற்ற திருட்டுச் சம்பவங்களை ஒப்பிடும்போது, 2024-இல் 10.6 சதவீதம் குறைவு.
ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: மாநிலத்தில் ரெளடிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த 550 ரெளடிகள் அடையாளம் காணப்பட்டு, அவா்கள் மீது நீதிமன்றம் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. முக்கியமாக அவா்கள் மீது நிலுவையில் இருந்த வழக்குளின் விசாரணை நீதிமன்றத்தில் விரைவுப்படுத்தப்பட்டு, தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்டது.
குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 2023-இல் 3,694 பேரும், 2024-இல் 4,572 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.