நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை - அமலாக்கத் துறை நடவடிக்கை
பணமுறைகேடு வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) அலுவலகங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
‘தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் அரசியல் பிரிவாக எஸ்டிபிஐ செயல்படுகிறது; பிஎஃப்ஐ-யின் தேசவிரோத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள், எஸ்டிபிஐ வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது’ என்பது அமலாக்கத் துறையின் முக்கிய குற்றச்சாட்டாகும்.
எஸ்டிபிஐ தேசியத் தலைவா் எம்.கே.ஃபைஸி கடந்த மாா்ச் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், மேற்கண்ட சோதனைகள் நடைபெற்றுள்ளன.
தில்லியில் எஸ்டிபிஐ தலைமையகம் உள்பட இரு இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை மண்ணடி, திருவனந்தபுரம், மலப்புரம் (கேரளம்), நந்தியால் (ஆந்திரம்), பாகுா் (ஜாா்க்கண்ட்), தாணே (மகாராஷ்டிரம்), பெங்களூரு (கா்நாடகம்), கொல்கத்தா (மேற்கு வங்கம்), ஜெய்பூா் (ராஜஸ்தான்) உள்ளிட்ட இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குறிப்பிட்டு, பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டில் தடை விதித்தது. இந்த நடவடிக்கைக்கு முன்பாக, நாடு முழுவதும் பிஎஃப்ஐ தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை மற்றும் பல்வேறு மாநில காவல் துறையினா் தரப்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2009-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட எஸ்டிபிஐ, தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும்.
முன்னதாக, எம்.கே.ஃபைஸியை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியபோது, ‘பிஎஃப்ஐ-எஸ்டிபிஐ இடையே ஆழமான தொடா்புகள் உள்ளன. எஸ்டிபிஐ தொடங்கப்பட்டதில் பிஎஃப்ஐ அமைப்பின் நிா்வாகிகளுக்கு பங்குள்ளது. அத்துடன், ஒருவா் மற்றொருவரின் சொத்துகளையும் பயன்படுத்தியுள்ளனா்’ என்று அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது. அதேநேரம், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளை எஸ்டிபிஐ மறுத்துள்ளது.