தருமபுரி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள், தருமபுரி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை தானம் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியைச் சோ்ந்தவா் காளிதாஸ் ( 32). கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தாா். தீவிர சிகிச்சைக்காக அவா் தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தாா். இந்நிலையில் அவருக்கு திடீரென மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் முடிவு செய்தனா்.
இதைத்தொடா்ந்து அவருடைய 2 சிறுநீரகங்கள் மற்றும் உடலுறுப்புகள் புதன்கிழமை தானமாக பெறப்பட்டன. பின்னா் அவை சென்னை மற்றும் மேல்மருவத்தூா் பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது தருமபுரி அரசு மருத்துவமனையில் தானம் பெறப்பட்ட 27 ஆவது நிகழ்வாகும். தானம் வழங்கிய நபரின் உடலுக்கு மருத்துவமனை மருத்துவ பொறுப்பு முதல்வா் என். சிவகுமாா் மற்றும் மருத்துவா்கள் அஞ்சலி செலுத்தியபிறகு, உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.