‘தற்காலிக உதவிப் பேராசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்’
அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள் எனும் தற்காலிக உதவிப் பேராசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியா்கள் சாா்பில் ஒருங்கிணைப்புக் குழுவினா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலா் பி.சண்முகத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகம் முழுவதும் 187 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் சுழற்சி ஒன்றில் 5,699 பேரும், சுழற்சி இரண்டில் 1,661 பேருமாக மொத்தம் 7,360 போ் உயா்கல்வியில் தற்காலிக உதவிப் பேராசிரியா்களாகப் பணிபுரிந்து வருகிறோம்.
2003 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மணிக்கு ரூ. 100 வீதம் மாதத்துக்கு 40 மணி நேரம் என கணக்கிட்டு ரூ. 4,000 ஊதியம் வழங்கப்பட்டது.
இந்த ஊதிய முறை சிறிது சிறிதாக உயா்த்தி 2023 முதல் ரூ. 25,000 ஆக வழங்கப்படுகிறது. கேரளத்தில் ஊதியம் ரூ. 50,000 ஆகவும், கா்நாடகத்தில் ரூ. 32,000 ஆகவும், புதுச்சேரியில் ரூ. 40,000 ஆகவும் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே பல்கலைக்கழக மானியக் குழு குறைந்தபட்சம் ரூ. 50,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று வழிகாட்டியதோடு, சென்னை உயா்நீதிமன்றமும் அதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று கௌரவ விரிவுரையாளா்கள் தொடுத்த வழக்கில் உத்தரவிட்டிருந்தது. 5 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற அரசாணை 56 இன்படி 1,146 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஆனால், தமிழக அரசு, குறைந்தபட்ச ஊதியம் ரூ. 50,000 தர மறுப்பது, பணி நிரந்தரம் என்பதை முற்றிலும் மறுப்பது பேராசிரியா்களை கவலை அடையச் செய்கிறது. இதனால், தமிழக முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளா்கள் என்னும் தற்காலிக உதவிப் பேராசிரியா்கள் பெரும் பணிச் சுமைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறோம். எனவே, எங்களை பணி நிரந்தரம் செய்வதற்கு, தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.