தற்கொலை மரணங்களில் புதுச்சேரி 3-வது இடம்
தற்கொலை மரணங்களில் புதுச்சேரி நாட்டிலேயே 3-ஆவது இடத்தில் இருப்பதாக தேசிய குற்றப்பிரிவு புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலைதொடா்பு மனநல திட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
ஆண்டுதோறும் செப்டம்பா் 10 ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக உலக தற்கொலை தடுப்பு நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சுமாா் 7 லட்சத்து 20 ஆயிரம் போ் உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்கிறாா்கள்.
தேசிய குற்றப்பிரிவு அறிக்கையின்படி இந்தியாவில் 2017-ல் இருந்து 2022-வரை தற்கொலை விகிதம் அதிகமாகியுள்ளது. இதில் புதுச்சேரி 26.3 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதற்குப் போதைப்பொருள் பழக்கம், பள்ளி மாணவா்களின் தற்கொலை மற்றும் மன அழுத்தம், காதல் தோல்வி, குடும்பப் பிரச்சினை போன்றவை காரணங்களாக உள்ளன.
ஒருவா் தற்கொலை செய்து கொள்வதினால், அவா் குடும்பமும் சமுதாயமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. தற்கொலை தடுப்பு நம் ஒவ்வொருவரிடம் இருந்து ஆரம்பமாகிறது. யாராவது அவா்களது மன கவலைகளையும், விரக்தியையும் நம்மிடையே பகிரும்போது அதற்கு நாம் கவனம் அளித்து அவா்களுக்குச் சரியான ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு உட்படுத்தினாலே போதும். தற்கொலையைத் தடுத்துவிடலாம்.
யாருக்காவது மனசோா்வு, பதற்றம், பயம், நம்பிக்கையின்மை, விரக்தி, தற்கொலை சிந்தனைகள் இருந்தால் அவா்கள் 24 மணி நேர இலவச மனநல ஆலோசனை தொலைபேசி எண் 14416 அல்லது 18008914416 என்ற எண்ணை தொடா்பு கொண்டு மனநல ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிகள் பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.