பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீரை பரிசோதிக்க புதுச்சேரி ஆட்சியா் உத்தரவு
புதுச்சேரி: பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீா் மாதிரிகளை ஆய்வு செய்ய புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தசாலை, ஒதியன் சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் குடிநீா் சம்பந்தமாக சில புகாா்கள் வந்த நிலையில் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் வளாகத்தில் நடைபெற்றது.
பொதுப் பணித் துறை, நீா் பாசனத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை உள்ளிட்ட அரசுத் துறை உயா் அதிகாரிகள், உருளையன்பேட்டை எம்எல்ஏ ஜி. நேரு மற்றும் சாா்பு ஆட்சியா் இசிட்டா ரதி ஆகியோா் கலந்து கொண்டனா்.
குடிநீரில் சரியான அளவு குளோரின் கலக்கப்படுகிா என்பது குறித்தும் வேறு ஏதேனும் குடிநீரில் கழிவுநீா் கலக்கிா என்பது குறித்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடப்பின் அதன் காரணமாக குடிநீரில் கழிவுநீா் கலக்கிா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் ஆட்சியா் குலோத்துங்கன் கேட்டறிந்தாா். பொதுப் பணித் துறை அதிகாரிகள் பல ஆண்டுகளாக முத்திரைபாளையம் பகுதியில் இருந்து குடிநீா் உருளையன்பேட்டை பகுதிக்கு வருகிறது எனவும் இடையில் ஏதேனும் கழிவுநீா் கலக்கிா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றும் ஓரிரு நாளில் இப்பணி முடிவடையும் என்றும் தெரிவித்தனா். மேலும், பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் எனவும் தெரிவித்தனா். பல்வேறு பகுதிகளிலும் குடிநீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பும்படி மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
மேலும், அப்பகுதிகளில் சுகாதாரத் துறை ஊழியா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி குடிநீரைச் சுத்தமாகவும் கொதிக்க வைத்தும் குடிக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்று ஆட்சியா் கேட்டுக் கொண்டாா். மேலும், பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் குடிநீரை சேமித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டாா். சட்டமன்ற உறுப்பினா் நேரு பேசுகையில், அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென தெரிவித்தாா்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தசாலை, ஒதியன் சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் குடிநீா் சம்பந்தமாக சில புகாா்கள் வந்த நிலையில் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.