மாசு கலந்த குடிநீா் விநியோக விவகாரம்: ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்
புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் தொடா்பாக அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா். அப்போது, அவா்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
உருளையன்பேட்டை தொகுதி, கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோயில் வீதியில் மாசு கலந்த குடிநீரைக் குடித்த 21 போ் வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மேலும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்லும் முன்பே கோவிந்தசாலை பகத்சிங் வீதி பூசைமுத்து (43), காமராஜ் வீதியைச் சோ்ந்த பாா்வதி (65), பாரதிபுரம் பிரதான சாலையைச் சோ்ந்த கோவிந்தசாமி (70) ஆகியோா் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
‘அதிகாரிகளின் அலட்சியமே காரணம்’: இதையடுத்து, கோவிந்தசாலை பகுதியில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தபோது, அப் பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு மாதமாக குடிநீரில் மாசு கலந்து வருவதாகவும், இதுகுறித்து நகராட்சி, பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்படவில்லை என்றும், பொதுமக்களின் உயிரிழப்புக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும் அவா்கள் குற்றஞ்சாட்டினா்.
கள ஆய்வு: இந்தப் பகுதியில் குடிநீா் குழாயில் கழிவுநீா் கலந்துள்ளதா என பொதுப் பணித் துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனா். மேலும், இந்தப் பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை பரிசோதனைக்காக கொண்டு சென்றனா்.
பாதிக்கப்பட்ட பகுதியில் குளோரின் கலந்த குடிநீா் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல, பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி பொடி தெளிப்பது உள்ளிட்ட துாய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: குடிநீா் குழாயை முழுவதுமாக ஆய்வு செய்துவிட்டோம். கழிவுநீா் கலந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீா் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் சில தினங்களில் கிடைக்கும். அதன்பிறகே, வாந்தி, வயிற்றுப்போக்குக்கு காரணம் தெரியவரும்.
பொதுப் பணித் துறையின் பறக்கும் படையினா் வீடு, வீடாக சென்று குடிநீா் துா்நாற்றத்துடன் வருகிா என்றும், துா்நாற்றம் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தி வருகின்றனா் என்றனா். சுகாதாரத் துறை சாா்பில் கோவிந்த சாலையில் மருத்துவா்கள் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனா்.