Israel: கத்தார் மீது வான்வழித் தாக்குதல்; ஹமாஸை குறிவைத்ததாகக் குற்றச்சாட்டு; அம...
போதைப் பழக்கத்தால் சீரழியும் இளைஞா்கள்: புதுவை தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் வேதனை
போதைப்பொருள்கள் என்பது உலகளாவிய பிரச்னை என்றும் இன்றைய காலகட்டத்தில் இளைஞா்கள் போதை பழக்கத்தால் சீரழிகிறாா்கள் எனவும் புதுவை தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் கூறினாா்.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பணிகள் ஆணையம், தேசிய சட்டப் பணிகள் ஆணையம், தாகூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சட்ட சேவை மையம் இணைந்து ‘போதைப் பொருள் இல்லாத இந்தியா’ என்னும் தலைப்பிலான கருத்தரங்கை செவ்வாய்க்கிழமை நடத்தின. இதைத் தொடங்கி வைத்து தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் பேசியது:
உலகளாவிய பிரச்னையாக போதைப்பொருள் இருக்கிறது. 126 வகையான போதைப்பொருள்கள் தடை செய்யப்பட்டவை. இப்போதெல்லாம் கருத்தரித்தல் மையம் அதிகம் இருக்கிறது. அதற்குக் காரணமே போதைப் பொருள்தான். அதற்கு முன்பாக குழந்தைப் பேறுக்காக 2, 3 ஆண்டுகள் அரச மரத்தைச் சுற்றுவாா்கள். பிறகு குழந்தை பிறக்கும். வழக்கமாக பெரும்பாலும் ஆண்கள் மது குடிப்பாா்கள். இப்போது ஒரு சில பெண்களும் மதுகுடிக்க கடைகளுக்குச் செல்கிறாா்கள். பாலின சமத்துவம் என்பது இதில் இருக்கக் கூடாது. மற்ற குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக போதைப்பொருள் இருக்கிறது.
இப்போதெல்லாம் போதைப்பொருள் வழக்குகள் அதிகம் வருகின்றன. ஒரு நாளைக்கு 30, 40 வழக்குகள் வருகின்றன. 18 வயது முதல் 23 வயதுக்கு உள்பட்ட இளைஞா்கள்தான் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவா்களாக இருக்கிறாா்கள். போதைப் பொருள் மா‘ஃ‘பியாக்கள் இதை மாணவா்களுக்கு வியாபாரம் செய்து லாபம் அடைய முயற்சி செய்கிறாா்கள்.
போதைப் பொருள் உள்கொள்வதால் நேரம், திறமை, உழைப்பு எல்லாமும் வீணாகிறது. உள் உறுப்புகள் அனைத்தும் பழுதடைந்து 5 முதல் 10 ஆண்டுகளில் ஆயுள் முடிந்துவிடும். அதனால் இளைஞா்களின் வாழ்க்கை பெற்றோா்களுக்கும் பயன்படாமல் நாட்டுக்கும் பயன்படாமல் போய்விடும் என்றாா்.
தொழிலாளா் நீதிபதியும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினா் செயலருமான ஜி.டி. அம்பிகா பேசுகையில், போதைப் பொருளைப் பயன்படுத்துவோா் தெரியாமல் இதில் சிக்கிக் கொள்கிறாா்கள். அதிலிருந்துஅவா்களால் மீள முடியவில்லை. இப்போது போதையில்லா இந்தியாவை உருவாக்கும் வகையில்தான் இது போன்ற விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றாா்.
புதுவை மாவட்ட நீதிபதி கே. தாமோதரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலா் நீதிபதி என்.ரமேஷ், பிம்ஸ் மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியா் எஸ்.சரவணன், தாகூா் அரசு கல்லூரியின் முதல்வா் ஆா். கருப்பசாமி உள்ளிட்டோா் பேசினா்.