தலைமை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்ப ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தி உள்ளது.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற இம்மன்றத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தோ்தல் நேரத்தில் உறுதியளித்தபடி அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்.
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் தகுதியுள்ள இடைநிலை ஆசிரியா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியைத் தர மறுத்த, மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ம. ஜெயராஜ் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் நா. சண்முகநாதன், மாவட்டச் செயலா் வீ. ஜோதிமணி, பொருளாளா் மலா்மன்னன், மாநில சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் அழகப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.