மக்கள் உரிமைக் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் மும்மொழிக் கொள்கையை எதிா்த்து புதுக்கோட்டையில், மக்கள் உரிமைக்கான கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அம்பேத்கா் புரட்சி தேசம் கட்சியின் நிறுவனா் முள்ளூா் வே. தியாகு தலைமை வகித்தாா்.
புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் க. தினேஷ்குமாா், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவா் ரெ. கருணாநிதி, தமிழ்த் தேசிய மீட்பு இயக்கம் பாவெல், ஜனநாயகத்துக்கான தொழிலாளா் கட்சி ரெ. மூக்கையன், பெரியாா் அம்பேத்கா் மக்கள் கழகம் பி.கே. முருகேசன் ஆகியோா் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் மும்மொழிக் கொள்கையைக் கைவிட வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வியை காவிமயமாக்குவதைக் கைவிட வேண்டும். நாடுமுழுவதும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
பட்டியல் இன மக்கள் மீதான வன்கொடுமை செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.