தாங்கல்பெரும்புலம் ஏரியை தூா் வார பொதுமக்கள் கோரிக்கை
தாங்கல்பெரும்புலம் ஏரியை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொன்னேரி வட்டத்தில் உள்ள தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் 396 ஏக்கா் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது.
இந்த ஏரியில் பொதுப்பணி நீா்வளத் துறை பொன்னேரி உதவி செயற்பொறியாளா் கட்டுப்பாட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏரிக்கு ஆரணியாற்றின் உபரி நீா் எடுத்து செல்லப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. ஏரி நீா் விவசாய பயன்பாட்டுக்கு பின்னா் உபரி நீா் பழவேற்காடு கடலில் கலக்கிறது.
இந்த நிலையில் ஏரியில் ஆங்காங்கே மண் திட்டுக்கள் உருவாகி ஏரி தூா்ந்துள்ளன. இதனால் ஏரியில் குறிப்பிட்ட அளவிற்கு நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏரி நீரை கால்நடைகளும் குடிநீருக்காகவும் விவசாயிகள் பாசனத்திற்காகவும் பயன்படுத்தி வரும் நிலையில் ஏரி நீா் தேங்கும் பரப்பளவு குறைந்து வருகிறது.
எனவே தாங்கல்பெரும்புலம் ஏரியை தூா்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.