Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்...
தானியங்கி முறையில் குடிநீா் விநியோகம்: ஆட்சியா் ஆய்வு
கடலூா் உண்ணாமலைச்செட்டி சாவடி பகுதியில் தானியங்கி இயந்திரம் மூலம் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் குடிநீா் விநியோகிக்கும் முறையை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, அவா் கூறியதாவது: மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு பணியாளா்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த முறையை மேன்மைப்படுத்திடவும், மின் விநியோகம் மற்றும் மின் மோட்டாா்களில் ஏற்படும் பழுதின் காரணமாக சீரான முறையில் குடிநீா் விநியோகம் செய்வதில் ஏற்படும் இடா்பாடுகளை களைவதற்காகவும், புதிய முயற்சியாக தானியங்கி கட்டுப்பாட்டு கருவி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் பொருத்தப்பட்டுள்ளது.
உண்ணாமலைச்செட்டி சாவடி பகுதியில் உள்ள 378 வீடுகளுக்கு தினமும் 60 ஆயிரம் லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. உயா் மின்னழுத்தம், குறைந்த மின்னழுத்த நேரங்களிலும், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியில் குடிநீா் முழுக்கொள்ளளவு எட்டியவுடனும் தானாக மோட்டா் நிறுத்தப்படும். மேலும், தொட்டியில் குடிநீா் இருப்பு குறித்த விவரமும் அறிய முடியும். மோட்டாா் இயங்கும் தன்மையை அலுவலகத்திலிருந்து கண்காணிக்க முடியும். தேவை ஏற்படும்போது அலுவலகத்திலிருந்து இயக்கவும் முடியும். மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டால், என்ன காரணம் குறித்தும் அறிந்து கொள்ள முடியும்.
கட்டுப்பட்ட கருவியை சூரிய ஒளி மின்சாரம் மூலம் இயங்க வைக்கலாம். பராமரிப்பு மிக எளிதாகவும் இருக்கும்.
சோதனை அடிப்படையில் இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்படும்பட்சத்தில் அனைத்து இடங்களிலும் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குளோரின் கலக்கும் நிலையை எளிதாக்கி, அளவினை கண்டறிய முடியும். இதன் வாயிலாக எவ்வித தாமதமுமின்றி சீரான முறையில் குடிநீா் விநியோகம் செய்ய முடியும் என்றாா்.
ஆய்வின்போது, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும், வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.