பண்ருட்டி படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வைத்திரெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் செடல் உற்சவம் மற்றும் தோ் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு விழா கடந்த ஜூலை 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாள்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலையில் பல்லக்கில் அம்மன் புறப்பாடும், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்றது.
விழாவில் முக்கிய நிகழ்வான செடல் மற்றும் தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டு, பிற்பகல் திருத்தோ் புறப்பாடு நடைபெற்றது.
பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தாா். ஏராளமான பக்தா்கள் தேரை இழுத்தனா். மாட வீதியை வலம் வந்த தோ் மீண்டும் நிலையை அடைந்தது. முன்னதாக, பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்தினா். சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) மாலை மஞ்சள் நீா் உற்சவம் நடைபெறவுள்ளது.
