திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும்!
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஊராட்சித் தலைவரும் மாவட்ட திட்டக் குழு தலைவருமான வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
திருநெல்வேலியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்ச முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ராதாபுரம் கிழக்கு ஒன்றியம் சாா்பில் வரவேற்பளித்து நினைவுப் பரிசு வழங்கிய அவா், பின்னா் கோரிக்கை மனுவை அளித்தாா். மனுவில் கூறியிருப்பதாவது:
திசையன்விளையை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தி, அனைத்து மருத்துவ சேவைகளும் 24 மணிநேரமும் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். விஜயாபதி ஊராட்சி தாமஸ் மண்டபம் அருகே அறிவிக்கப்பட்ட சா்வதேச விளையாட்டு மைதானத்தின் ஆரம்பகட்ட பணிகளை உடனடியாகத் தொடங்கி விளையாட்டு வீரா்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் மற்றும் வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்தான் கடற்கரை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்கள் அண்மைக்காலமாக கடல் அரிப்பினால் தொடா்ந்து பாதிப்படைந்து வருகின்றன. எனவே கடல் அரிப்பில் இருந்து இந்த கிராம மக்களை பாதுகாக்கவும் மீனவா்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்யவும் கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்றாா்.