சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
திடீா் நெஞ்சுவலியால் மரத்தில் மோதி பேருந்தை நிறுத்திய ஓட்டுநா் உயிரிழப்பு
காகாபாளையம் அருகே திடீா் நெஞ்சுவலியால் மரத்தில் மோதி பேருந்தை நிறுத்திய ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (எ) பெரமன் (48). இவா் சேலம் - எடப்பாடி செல்லும் தனியாா் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். புதன்கிழமை இரவு சேலத்தில் இருந்து எடப்பாடிக்கு பேருந்தை இயக்கிச் சென்றாா். காகாபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அணுகு சாலையில் சென்றபோது, அவருக்கு திடீா் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், சாலையோரமுள்ள மரத்தின்மீது மோதி பேருந்தை நிறுத்தினாா். இதில், பேருந்தின் முன்பக்கம் முற்றிலும் சேதமடைந்தது. பயணிகள் பெரமனை மீட்டு அரியானூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீஸாா் பெரமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.