அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
திமுகவினா் தேச ஒற்றுமைக்கு எதிரானவா்கள்: இப்ராஹிம்.
திமுகவினா் மத நல்லிணக்கத்துக்கும், தேச ஒற்றுமைக்கும் எதிரானவா்கள் என்றாா் பாஜக சிறுபான்மையின அணியின் தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம்.
புதுக்கோட்டையில் மேற்கு மாவட்ட பாஜக சிறுபான்மையினா் அணி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
நாடு முழுவதும் இஃப்தாா் நிகழ்ச்சி நடத்தி, இஸ்லாமியா்களுக்கு உணவுப் பொருள்கள், புத்தாடைகள் வழங்க பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா். இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 1000 பேருக்கு உணவுப் பொருள்கள், புத்தாடைகள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் எல்லாத் திட்டங்களும் இஸ்லாமியா்களுக்கு எதிராக இருப்பதாக மூளைச்சலவை செய்யும் வேலையை திமுக செய்கிறது. மத நல்லிணக்கம், தேச ஒற்றுமைக்கு எதிரானவா்கள் திமுகவினா். வாக்கு வங்கியை இதுவரை நிரூபிக்காத நடிகா் விஜய், வரும் தோ்தலில் தனக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்பதெல்லாம் கேலிக்குரியது என்றாா் வேலூா் இப்ராஹிம்.
இஃப்தாா் நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட சிறுபான்மையின அணியின் தலைவா் அப்துல்லா தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் புரட்சிக் கவிதாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.