பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
கிடப்பில் கருவப்பிலான் கேட் ரயில்வே மேம்பாலத் திட்டம்
புதுக்கோட்டை நகரின் நுழைவாயிலிலுள்ள கருவப்பில்லான்கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டம் புதுக்கோட்டை மக்களுக்கு இன்னமும் கனவாகவே தொடா்கிறது.
திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புதுக்கோட்டை நகருக்குள் நுழையுமிடத்திலேயே இருக்கிறது கருவப்பில்லான் ரயில்வே கேட் பகுதி. புதுக்கோட்டை நகரிலுள்ள இந்த இடத்துடன், திருவப்பூா் ரயில்வே கேட் பகுதியிலும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது சுமாா் 30 ஆண்டு காலக் கோரிக்கை.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சு. திருநாவுக்கரசா், மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா ஆகியோரின் தொடா் முயற்சிகளுக்குப் பிறகு இரு இடங்களிலும் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டு, மண் பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 2023ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மண் பரிசோதனையின் முடிவில், திருவப்பூருக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டு, நிலத்தை அளவீடு செய்யும் பணிகளை ரயில்வே துறையினா் மேற்கொண்டனா். மாநில நெடுஞ்சாலைத் துறையில் நிலமெடுப்புக்கு ரூ. 41 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
ஆனால் கருவப்பிலான்கேட் பகுதியில் நடத்தப்பட்ட மண் பரிசோதனையில் திருப்திகரமான முடிவுகள் வராவிட்டாலும், வேறொரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டுமானம் மேற்கொள்ள ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு ஓராண்டு நிறைவடைந்தும் இந்தப் பிரச்னையில் முன்னேற்றம் இல்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து நிஜாம் குடியிருப்பைச் சோ்ந்த அப்துல்கரீம் கூறியது:
கருவப்பிலான்கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைந்தால் நகருக்குள் நுழையும் பகுதியே பிரம்மாண்டமாக வளா்ச்சியடையும். தொடா்ந்து ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்திலும் கருவப்பிலான்கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற குரல் வந்தாலும் மத்திய ரயில்வே துறை இசைந்து வரவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
திருவப்பூா் பாலப் பணிகள் தொடங்கும்போதே, இந்தப் பகுதியிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்க தொடக்க நிலைப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் துயரத்தைத் துடைக்க வேண்டும் என்றாா் கரீம்.
ஒவ்வோா் ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது, புதுக்கோட்டை நகரின் நுழைவாயிலிலுள்ள கருவப்பில்லான்கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான அறிவிப்பு ஏதாவது இருக்கிா எனப் பாா்த்துவரும் புதுக்கோட்டை மக்களுக்கு இன்னமும் அத் திட்டம் கனவாகவே தொடா்கிறது.
எனவே, மக்களின் நீண்டகாலக் கனவை நனவாக்க மத்திய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்கவும், அதற்கு நாடாளுமன்ற உறுப்பினா்கள் தேவையான வலியுறுத்தல்களை மேற்கொள்ளவும் பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.