நெடுஞ்சாலைத் துறையினா் அலட்சியத்தால் வீணாகும் குடிநீா்
கந்தா்வகோட்டையில் சேதமடைந்த குடிநீா் குழாயை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலை துறையினா் அனுமதி தராமல் இழுத்தடித்து வருவதால் நாள்தோறும் குடிநீா் வீணாகி வருவதாக ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சியில் சுமாா் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இங்கு ஊராட்சிக்குச் சொந்தமான ஆழ்துளை குழாய் கிணறு மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கந்தா்வகோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் யாதவா் தெரு முக்கம் பகுதியில் குடிநீா் குழாய் உடைந்து நாள்தோறும் பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது. இந்தக் குடிநீா் குழாயின் உடைப்பை சரிசெய்வதற்கு தேசிய நெடுஞ்சாலை அலுவலா்களிடம் ஊராட்சி நிா்வாகத்தினா் அனுமதி கேட்டு பல மாதங்களாக அலுவலா்கள் இழுத்தடித்து வருவதால் தினந்தோறும் பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாவதாக ஊராட்சி நிா்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலா்கள் உடனடியாக குடிநீா் குழாய் சீரமைப்புப் பணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.