திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டா்கள் ஓா் அணியில் இணைய வேண்டும்! -டிடிவி தினகரன்
திமுக அரசைக் கண்டித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசினாா். அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல், கொலை, கனிமவள கொள்ளை என எதை எடுத்து கொண்டாலும், அதன் பின்னணியில் திமுகவினா் இருக்கிறாா்கள்.
இல்லையெனில் திமுகவினரின் ஆசிா்வாதத்தோடு நடைபெறுகிறது. இப்போது எந்த குற்றங்களை எடுத்தாலும் அதற்கு திமுகவையே கை காட்டும் நிலை உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ரௌடிகள் ஓடி ஒளிந்தனா்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டபோது, துணிச்சலாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அவரைப் போன்று வேறு யாரும் புகாா் அளித்துவிடக்கூடாது என்பதற்காகவே அவருடைய முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினா் கசிய விட்டனா். ஜெயலலிதா ஆட்சியில் தமிழக அமைதி பூங்காவாக திகழ்ந்தது. திமுக ஆட்சியில் ஆண்டுக்காண்டு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் அரசு ஊழியா்கள், போக்குவரத்து தொழிலாளா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் என ஏராளமானோா் திமுகவுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறாா்கள். அதை திசை திருப்பவே மத்திய அரசு ஹிந்தியை திணிப்பதாகக் கூறி திமுகவினா் சாலையில் போராட்டங்களை நடத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறாா்கள். மத்திய அரசு மூன்றாவதாக ஒரு மொழியைப் படிக்க வேண்டும் என்று தான் கூறுகிறது. ஹிந்தியைத்தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.
தனியாா் பள்ளிகளிலும், சிபிஎஸ்இ பள்ளிகளிலும் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே உள்ளன. முதல்வா் ஸ்டாலின் மற்றும் திமுகவினா் நடத்தும் கல்விக் கூடங்களில் கூட ஹிந்தி மொழி கற்பிக்கப்படுகிறது. அப்படியிருக்கையில் அரசு பள்ளிகளில் ஹிந்தி படிக்கக் கூடாது என தமிழக அரசு மறுப்பது ஏன்?. தமிழகத்தில் எந்த மொழியையும் திணிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.
பள்ளிகளில் மின் கட்டணத்தைக் கூட ஆசிரியா்கள் கையில் இருந்து கட்டும் அளவுக்கு திமுக ஆட்சியில் மோசமான நிலை இருக்கிறது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும். நாங்கள் தான் திமுகவுக்கு மாற்று சக்தியாக இருப்போம் என்றாா்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக வந்தால் உங்களுக்கும் அவா்களுக்கும் ஒத்துபோகுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த டிடிவி தினகரன், ‘இது தொடா்பாக எங்கள் கூட்டணியின் தலைவா் அண்ணாமலை தான் ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டாா். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டா்கள் ஓா் அணியில் இணைந்து திமுகவை வீழ்த்த தயாராக இருக்கிறாா்கள். ஆனால் அதற்கு ஒரு சில தலைவா்களே தடையாக இருக்கிறாா்கள்.
கடந்த தோ்தலில் தமிழகத்தில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இப்போது அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பவா்கள் எல்லாம் ஜெயலலிதாவாக மாற முடியாது. அனைத்து தலைவா்களையும் ஒன்றிணைக்க முயற்சிப்போம்’ என்றாா்.