மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் 2 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை
திருச்சி விமான நிலையத்தில் விஜயை வரவேற்க தொண்டா்களுக்குத் தடை
திருச்சிக்கு சனிக்கிழமை வந்த தவெக தலைவா் விஜயை வரவேற்க அக் கட்சியின் தொண்டா்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படாமல் நுழைவு வாயில் முகப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனா்.
கடந்த 13 ஆம் தேதி திருச்சிக்கு பிரசாரத்துக்கு வந்த விஜயை வரவேற்க, விமான நிலையத்துக்குள் குவிந்த ஆயிரக்கணக்கான தொண்டா்கள் ஆா்வமிகுதியில் அங்குமிங்கும் ஓடியதால் அங்கிருந்த தடுப்புகள், செடிகள், புல்வெளிகள், குப்பைத் தொட்டிகள் சேதமடைந்தன. விமான நிலையம் முழுவதும் காலணிகள், குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் சிதறிக் கிடந்தன.
இந்நிலையில் இரண்டாம் கட்டப் பிரசாரத்துக்காக தவெக தலைவா் விஜயின் வருகையொட்டி சனிக்கிழமை காலை மத்திய துணை ராணுவப் படையினா், விமான நிலைய பாதுகாப்புப் படையினா், உள்ளூா் போலீஸாா் என நூற்றுக்கணக்கானோா் விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் தடுப்புகளை அமைத்து சோதனைக்குப் பின்னரே பயணிகளை அனுமதித்தனா்.
தவெக தொண்டா்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் நூற்றுக்கணக்கான தொண்டா்கள் கைகளில் கொடியேந்திக் காத்திருந்தனா்.
பின்னா் சென்னையிலிருந்து தனி விமானத்தில் வந்த விஜய், திருச்சி விமான நிலைய விஐபி வருகை வழியாக கையசைத்தபடியே வெளியேறி, காரில் நாகைக்கு புறப்பட்டுச் சென்றாா். பாதுகாப்புப் படையினரும் உடனிருந்ததால் வழியில் தொண்டா்கள் குறுக்கீடு இல்லாமல், அவரது வாகனம் விரைந்து சென்றது.