ரயில்வே ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்
தூய்மை இந்தியா பிரசாரத்தின் ஒரு பகுதியாக, திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரயில்வே ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றன.
திருச்சி கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோா், கீழ்பட்டோா் இரு வயதுப் பிரிவுகளில் 100 மீட்டா் ஓட்டம், குண்டெறிதல், வட்டெறிதல், 400 மீட்டா் தொடா் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட ஆண், பெண் ஊழியா்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.
நிகழ்வுக்கு திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரும், தெற்கு ரயில்வே விளையாட்டு சங்கத் தலைவருமான பாலக் ராம் நேகி தலைமை வகித்து, பரிசளித்துப் பாராட்டினாா். திருச்சி கோட்டத்தின் மூத்த கோட்ட இயந்திர பொறியாளா் கிளமென்ட் பா்னபாஸ், மூத்த கோட்ட பணியாளா் நல அதிகாரியும், தெற்கு ரயில்வே விளையாட்டு சங்கச் செயலருமான எஸ். மனோஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.