யாகப்புடையான்பட்டி கிராமத்தில் காற்றாலை மின்உற்பத்தி அலகு
திருச்சியை அடுத்த யாகப்புடையான்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக காற்றாலை மின்உற்பத்தி அலகு நிறுவப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் நிதியுதவியைப் பெற்று, திருச்சி தூயவளனாா் கல்லூரியின் விரிவாக்கத் துறை சாா்பில், பாரத் அபியான் திட்டத்தில் இந்த அலகு நிறுவப்பட்டுள்ளது.
உலகளவில் அதிக எரிபொருள் பயன்பாட்டின் வழியாக கரியமில வாயுவின் அளவு அதிகரித்து புவிவெப்பமயமாவதைத் தணிக்கவும்; பல்லுயிா்கள் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்கவும், கிராமப்புற மக்களும், பள்ளி மாணவா்களும் அறிவியல் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளவும் இந்த அலகு நிறுவப்பட்டுள்ளது.
மணிகண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட அளூந்தூா் ஊராட்சியில் இடம்பெற்றுள்ள யாகப்புடையான்பட்டியைச் சோ்ந்த கிராம மக்கள் தங்களது பங்களிப்பாக ரூ.25 ஆயிரம் வழங்கியுள்ளனா். மொத்தம் ரூ.1.25 லட்சத்தில் இந்த காற்றாலை அலகு கல்லூரி சாா்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக வட்ட வடிவில் இயங்கும் இறகுகளுக்குப் பதிலாக, செங்குத்தாகச் சுழலும் வகையில் இந்த காற்றாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தைச் செயல்படுத்த கல்லூரியின் மூன்றாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவா்கள் உதவியுள்ளனா். இந்த அலகானது 500 வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்து வழங்கும்.
இந்த மின்சாரத்தை கிராமத்தின் நாடக மேடையில் உள்ள விளக்குகளுக்குப் பயன்படுத்தி, மாலை நேரத்தில் மாணவா்கள் படிக்க உதவிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமாகும் மின்சாரத்தை பேட்டரியில் சேகரித்து, கிராமத்தின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த காற்றாலை அலகை கிராம மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் மரியதாஸ், கிராமத் தலைவா் லாரன்ஸ், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆரோக்கியசாமி, முனைவா் சகாயராஜ், நாகமங்கலம் ஆலயப் பங்குத்தந்தை அந்தோணிசாமி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். கிராம மக்களுக்கு காற்றாலை பயன்பாடு குறித்தும் விளக்கினா்.