எல்ஃபின் பண மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது
எல்ஃபின் நிறுவன பண மோசடி வழக்கில் மேலும் ஒருவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட எல்ஃபின் நிதி நிறுவனம் கவா்ச்சிகர திட்டங்களை கூறி தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்தது.
இதுதொடா்பான புகாா்களின்பேரில் திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, பலரை கைது செய்த நிலையில் முக்கிய முகவரான திருச்சி எடமலைப்பட்டிபுதூா் அரசு காலனியைச் சோ்ந்த பி. மணிகண்டராஜனை (37) சனிக்கிழமை கைது செய்தனா். இவருடைய தந்தை பால்ராஜும் எல்ஃபின் நிறுவன முக்கிய முகவராகப் பணியாற்றிய நிலையில், சில ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிவுறுத்தல்: எல்ஃபின் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்து புகாரளித்த 8,389 பேரில், 2,873 போ் மட்டுமே உரிய ஆதாரங்களுடன் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனா். மீதமுள்ளவா்கள் உரிய ஆதாரங்களுடன் திருச்சி மன்னாா்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து வாக்குமூலத்தைப் பதிய வேண்டும் என திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி லில்லி கிரேஸ் தெரிவித்தாா்.