"தனியார் துறைகள், நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு வேண்டும்" - பாமக மாநாடு தீர்மானங்...
திருச்சியில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 9ஆவது மாநாடு நாளை தொடக்கம்
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சாா்பில் இணைப்பே இலக்கியம் எனும் கருப்பொருளை உள்ளடக்கி உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 9ஆவது மாநாடு திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவா் சேமுமு. முகமதலி திருச்சியில் புதன்கிழமை கூறியதாவது:
1973 ஆம் ஆண்டு திருச்சியில் வைத்துத் தொடங்கப்பட்ட இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஒரு பன்னாட்டு அமைப்பு ஆகும். தற்போது 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்,பொன்விழா மாநாடாக திருச்சி எம்ஐஇடி கல்லூரியில் நடைபெறுகிறது.
இஸ்லாமிய இலக்கியங்கள் என்றாலே ஓரிரு நூல்கள் தான் உள்ளன என்று அறியப்பட்டிருந்த புரிதலை முற்றிலுமாக மாற்றி, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இஸ்லாமிய இலக்கியக் கழகத்தையே சாரும். பல்வேறு பல்கலைக் கழகங்களில் இருக்கைகள், அறக்கட்டளைகள் நிறுவவும், சமய நல்லிணக்கத்தை வளா்க்கவும், மனித நேயத்தை தழைக்க செய்யவும் இஸ்லாமிய இலக்கியக் கழகம் தொடா்ந்து பாடுபடுகிறது.
9ஆவது நாட் டின் கொள்கை முழக்கம்கூட இணைப்பே இலக்கியம் என்பதுதான். மனிதா்களை இணைப்பது, மத நல்லிணக்கத்தை வளா்ப்பது, மானுடத்தை தழைத்தோங்கச் செய்வது, சமூக நீதியை நிலைநாட்டுவது ஆகியவற்றை உள்ளடக்கிய மாநாடாக நடைபெறவுள்ளது.
மாநாட்டை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து பேரூரையாற்றுகிறாா்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன், மாநாட்டு தொடக்க உரையை வழங்கவுள்ளாா். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மாநாட்டு மலரை வெளியிட்டுப் பேசுகிறாா். கே.எம் காதா் மொகிதீனுக்கு, ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் உமறுப்புலவா் விருதும், சென்னைப் பல்கலை. முன்னாள் துணைவேந்தா் சே. சாதிக்கிற்கு, ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் கவிக்கோ விருதும் வழங்கப்படவுள்ளது.
மெளலானா அப்துல் காதிா் பாகவி, தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள், அருட்திரு ஜெகத் கஸ்பா் ராஜ், எஸ். பீட்டா் அல்போன்ஸ் உள்ளிட்ட பல் சமய பிரமுகா்களை வைத்து சமய நல்லிணக்க கருத்தரங்கத்தையும் நடத்தவுள்ளோம். தொடா்ந்து ஆய்வரங்கம், கவியரங்கம், மாா்க்க அறிஞா் அரங்கம், மகளிா் அரங்கம், ஊடக அரங்கம், தீனிசை அரங்கம், கருத்தரங்கம், வாழ்த்தரங்கம் உள்ளிட்டவை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளன.
இதில் அமைச்சா்கள் மு.பெ. சாமிநாதன், கோவி. செழியன், சா.மு. நாசா், விசிக தலைவா் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், எஸ்டிபிஐ கட்சியின் தலைவா் நெல்லை முபாரக் உள்ளிட்டோா் பேசுகின்றனா். 110 கட்டுரைகள் ஆய்வரங்கத்தில் சமா்ப்பிக்கப்படவுள்ளன. ஓா் அருங்காட்சியகமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் நிறைவு விழாவில், சட்டப் பேரவைத் தலைவா் மு. அப்பாவு, கே.எம். காதா் மொகிதீன், திருச்சி சிவா எம்பி உள்ளிட்டோா் பேசுகின்றனா்.
இந்த மாநாட்டின் நெறியாளா்களாக பேராசிரியா் கே.எம். காதா் மொகிதீன், தி.மு. அப்துல்காதா், நீதிபதி ஜி.எம். அக்பா் அலி, மாநாட்டின் அமைப்பாளராக இஸ்லாமிய இலக்கிய கழகத் தலைவரான சேமுமு. முகமதலி, பொதுச் செயலா் மு.இ.அகமது மரைக்காயா், பொருளாளா் எஸ்.எஸ். ஷாஜகான் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
எம்.ஐ.இ.டி. கல்வி குழுமத்தின் தலைவா் அ. முஹம்மது யூனுஸ் வரவேற்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
முதல் நாள் நிகழ்வில், முதல்வா், துணை முதல்வருடன், அமைச்சா்கள் கே என் நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இலங்கை முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம், பொதுச் செயலா் நிசாம் காரியப்பா், மலேசிய கல்வி வாரியத் தலைவா் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் மற்றும் எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள் பங்கேற்கவுள்ளனா்.
இஸ்லாமியா்களுக்கு இட ஒதுக்கீட்டை 5 விழுக்காடாக உயா்த்த வேண்டும், திருநெல்வேலியில் காயிதே மில்லத் பெயரில் நூலகம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் முக்கியத் தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன என்றாா் அவா்.