திருச்சியில் பலத்தக் காற்றுடன் மழை: மரங்கள் சாய்ந்தன
திருச்சியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்தக் காற்றுடன் பெய்த லேசான மழையில் ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை பகலில் கடும் வெயில் நிலவிய நிலையில், மாலையில் திடீரென பலத்தக் காற்று வீசியது. ஆங்காங்கே லேசான மழையும் பெய்தது. ஸ்ரீரங்கத்தில் 15 நிமிஷங்களுக்கும் மேலாக பலத்த சூறைக்காற்று வீசியது. அப்போது மழையும் பெய்தது. இதனால் ஸ்ரீரங்கம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் யானை நடை பயிலும் பகுதியிலும் பலத்தக் காற்று வீசியது. இதில், அப்பகுதியில் இருந்த மரம் சாய்ந்து மின்கம்பி மீது விழுந்ததில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் மின் வாரியத்தினா் மின் விநியோகத்தை துண்டித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினா் சாய்ந்து விழுந்த மரங்களை வெட்டி, அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து, மின்வாரியம் மூலம் சீரமைப்பு பணி நடைபெற்றது.
இதேபோல, திருச்சி மாநகரப் பகுதி முழுவதும் மாலையில் பலத்தக் காற்று வீசியது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. லேசான மழையும் பெய்தது.