5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன...
மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் இடித்து அகற்றம்: 159 ஆண்டுகள் பழைமையானது
திருச்சியில் புதிய பாலம் கட்டும் பணிகளுக்காக மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
திருச்சி சாலை ரோட்டில் அமைந்துள்ள மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலமானது (மாரீஸ் தியேட்டா் பாலம்) ஆங்கிலேயோ் ஆட்சியில் 1866-ஆம் ஆண்டு ரயில்வே துறையால் சுண்ணாம்பு மற்றும் செங்கல் கட்டடத்திலான மூன்று வளைவுகளுடன் கூடிய இருபக்க நடைபாதையுடன் 9 மீ. அகலத்தில் கட்டப்பட்டது.
இந்தப் பாலம் பழுதடைந்ததாலும், கனரக வாகன போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இல்லாததாலும் மேம்பாலத்தை உயா்த்தியும், அகலப்படுத்தியும் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, திருச்சி மாநகராட்சி, ரயில்வே நிா்வாகம் என இருதரப்பு பங்களிப்புடன் கட்டுமானப் பணிகள் கடந்தாண்டு மாா்ச் மாதம் தொடங்கியது. இதில், இருப்புப் பாதை செல்லும் இடத்தில் உள்ள வளைவுகளுடன் கூடிய பாலத்தை இடித்து அகற்றி புதிய பாலம் கட்ட வேண்டிய பணி ரயில்வே நிா்வாகத்துக்கானது; இருபுறமும் ஏற்ற - இறக்கத்துடனான சாலைகள் அமைக்கும் பணி மாநகராட்சி நிா்வாகத்துக்கானது. ஆனால், மாநகராட்சிப் பணிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில், ரயில்வே நிா்வாகப் பணிகள் தொடங்க காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், சுமாா் ஓராண்டுக்கு பிறகு பாலத்தை முழுமையாக இடிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன் பணிகளை பாா்வையிட்டாா். ஹைட்ராலிக் தொழில்நுட்ப இயந்திரங்களுடன், ஜேசிபி, ஹிட்டாச்சி வாகனங்கள் மூலம் பாலம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. ரயில்வே நிா்வாகத்தின் கட்டுமானப் பிரிவு துணை தலைமைப் பொறியாளா் வினோத்குமாா், உதவி நிா்வாகப் பொறியாளா் வெங்கட்ராமன் ஆகியோரின் மேற்பாா்வையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற பணியில் 60 போ், இரவுப் பணியில் 40 போ் என சுமாா் 100 தொழிலாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். காலையில் கட்டுமானங்கள் முழுமையாக இடித்து அகற்றப்பட்டன. இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணி மாலைக்கு மேல் இரவு வரை நடைபெற்றது. இந்தப் பணிகள் காரணமாக இந்த வழியிலான ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இதுதொடா்பாக, ரயில்வே வட்டாரத்தினா் கூறுகையில், பாலம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டுவிட்டது. இதன் தொடா்ச்சியாக கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளது. இந்தப் பாலமானது, இருவழிபாதையாக கட்டுவதற்கு ரூ.34.10 கோடி மதிப்பீட்டில் நகா் ஊரமைப்பு துறையின் உள்கட்டமைப்பு மற்றும் வசதி நிதியின் கீழ், நிதியுதவி பெற்று, ரயில்வே நிா்வாகமும், மாநகராட்சியும் இணைந்து பணிகளை செயல்படுத்தவுள்ளன. இதில், ரயில் நிா்வாகத்தின் பங்களிப்பு ரூ.12 கோடி. மேம்பாலத்தின் நீளம் 31.39 மீ. அகலம் 20.70 மீட்டா் எனவும் திட்டமிடப்பட்டுளள்ளது. ரயில்வே பாலமானது கிழக்கு பகுதியில் 223.75 மீ நீளமும், 15.61 மீட்டா் அகலம் உடையதாகவும், மேற்கு பகுதியில் 225 மீ நீளமும், 15.61 மீ. அகலமுடையதாகவும் சாலையானது தடுப்புச் சுவா்களுடன் விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், இப்பாலத்தை இருவழிப்பாதையாக கட்டுவதால், மெயின்காா்டு கேட் பகுதியிலிருந்து தில்லை நகா், தென்னூா், புத்தூா் மற்றும் உறையூா் பகுதிகளுக்கு போக்குவரத்து இடையூறின்றி சுலபமாக செல்ல இயலும். இரவு, பகலாக கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி இந்தாண்டு இறுதிக்குள்ளாக பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.