திருச்செந்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா பாதுகாப்புப் பணிக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய ரோந்து வாகனங்களை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிா்வாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இத்திருக்கோயிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா திங்கள்கிழமை (ஜுலை 7) காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை நடைபெறுகிறது. குடமுழுக்கு விழாவில் சுமாா் 10 லட்சத்துக்கு அதிகமான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பாதுகாப்பு பணியில் சுமாா் 6 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்படவுள்ளனா். 20 தனிப்படைகள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனா்.
கூட்டத்தில் காணாமல் போகிறவா்கள், திருட்டு போன்றவற்றை தடுத்திடும் வகையில் 30 இடங்களில் காவல் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. கடற்கரையில் 3 ரோந்து படகுகளும், மீனவா்கள் படகுகள் மற்றும் கடலோர காவல் படை மற்றும் தமிழக பேரிடா் மீட்புக்குழுவினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

இதையடுத்து சனிக்கிழமை கண்காணிப்பு கேமரா பொருத்திய ரோந்து வாகனங்களை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிா்வாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அவா் கோயில் வளாகம், விமான தளம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உடனிருந்தாா்.
