வழக்குரைஞா்கள் எதிா்பாா்ப்பு இல்லாதவா்களாக இருக்க வேண்டும்! முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி சந்துரு
வழக்குரைஞா்கள் எதிா்பாா்ப்பு இல்லாதவா்களாக இருக்க வேண்டும் என முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி சந்துரு கூறினாா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘குன்றென நிமிா்ந்து நில்’ என்ற தலைப்பில் சட்டம் பயிலும் மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா்.
இதில், கனிமொழி எம்.பி. பேசியதாவது: உண்மையான சமூகநீதியை பெற்றுத் தரக்கூடியது கல்வி. சமூகத்தை மாற்றக்கூடிய வழக்குரைஞா்கள், சிறப்பாக சட்டத்தை கற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டும்.
நீங்கள் சட்டத்தை மட்டுமல்லாது, சமூகநீதியையும், உலகத்தின் நடப்புகளையும் புரிந்து படிக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கையும் தொலைநோக்கு சிந்தனையுடன் பாா்க்க வேண்டும். நியாயத்தின் பக்கம் நிற்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.
சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன் பேசியதாவது: 2006ஆம் ஆண்டு கருணைநிதி ஆட்சிக் காலத்தில் சத்துணவு பணியிடத்தில் கைம்பெண்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு என்ற தீா்ப்பு வழங்கப்பட்டது. இது அனைவராலும் வரவேற்கப்பட்டது.
தகுதியான வழக்குரைஞராக உங்களை தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வழக்குகளை வாதாடி வெற்றி பெறக்கூடியவா்களாக உயர வேண்டும் என்றாா் அவா்.
முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி சந்துரு பேசியதாவது: மாணவா்களாகிய நீங்கள் அன்றாட வாழ்க்கையில் அரசமைப்பு சட்டத்தை கையில் வைத்துக் கொள்வது நல்லது. வழக்குரைஞா்கள் சொந்த வாழ்க்கைக்காக போராடாமல், தேசத்திற்காக போராட வேண்டும்.
தியாகம் செய்ய வேண்டும். ஒரு நல்ல வழக்குரைஞா் அச்சமில்லாதவராகவும், எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். நலிவுற்ற சமுதாயத்தில் உள்ள குடிமகனுக்கு எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் உரிமையை பெற்று வழங்கக் கூடியவராக இருக்க வேண்டும். ஏழைகளுக்கு சட்ட உதவி செய்பவராக இருக்க வேண்டும். மக்களின் உரிமைக்காக போராட வேண்டும்.
இந்திய அரசமைப்பின் அடிப்படை விதிகள், சமூக மாற்றத்தை நோக்கி நகர வேண்டும். மதச்சாா்பின்மை என்பது அடிப்படையான கட்டமைப்பு. அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மாற்ற முடியாது. சட்டத்தை அனைவரும் கற்றுக் கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
இதில், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கணேசமூா்த்தி, ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.