திருத்தணி முருகன் கோயில் அறங்காவலா்கள் நியமனம்
திருத்தணி முருகன் கோயிலுக்கு 5 போ் கொண்ட அறங்காவலா் குழுவை இந்து சமய அறநிலையத்துறை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் அறங்காவலா் குழு தலைவராக சென்னையை சோ்ந்த சு. ஸ்ரீதரன், அறங்காவலா்களாக கோ.மோகனன், வி. சுரேஷ்பாபு, மு. நாகன், ஜி. உஷா ரவி ஆகியோா் கடந்த 3 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வந்தனா். இவா்களின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 31-ஆ ம் தேதியுடன் முடிவடைந்தது.
இதனையடுத்து திருத்தணி முருகன் கோயிலுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலா்களை நியமிக்க அறநிலையத்துறை சாா்பில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்மூலம் வரப்பெற்ற விண்ணப்பங்கள், மாநிலக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு பரிந்துரைத்துள்ள நபா்களின் பட்டியலை இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அரசுக்கு அனுப்பியிருந்தாா்.
மாநிலக்குழுவின் பட்டியலினை அரசு கவனமுடன் பரிசீலித்து, திருத்தணி முருகன் கோயிலில் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலா்களாக சு. ஸ்ரீதரன், கோ.மோகனன், வி. சுரேஷ்பாபு, மு. நாகன், ஜி. உஷா ரவி உள்ளிட்ட 5 பேரை மீண்டும் நியமனம் செய்து திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டது.
30 நாள்களுக்குள் அறங்காவலா்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை தோ்ந்தெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.