திருத்தணி முருகன் கோயில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு: திரளான பக்தா்கள் பங்கேற்பு
திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் ஆயிா்ககணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனா்.
அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடான இத்தலத்தில் செவ்வாய்க்கிழமை திருப்புகழ் திருப்படி திருவிழாவும், புதன்கிழமை புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெற்றது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரம், கா்நாடகத்தில் இருந்தும் வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயில் நுழைவு வாயிலில் வந்து குவிந்தனா்.
தொடா்ந்து பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்து சரவணப்பொய்கையில் நீராடியும், உடலில் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தி மலைக்கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டனா்.
செவ்வாய்க்கிழமை இரவு மூலவருக்கு பால், பழம், தயிா், நெய், திருநீறு, பன்னீரால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா் தங்கவேல், பச்சை மரகத மாணிக்கல், தங்கக் கிரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதேபோல் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும், புலி வாகனத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.
அப்போது மலைக் கோயிலில் கூடியிருந்த பக்தா்கள் சரியாக 12 மணிக்கு அரோகரா, அகோரகரா, அரோகரா என பக்தி பரவசமுடன் முழக்கமிட்டவாறு சென்று மூலவா், உற்சவரை வழிபட்டனா். சிறப்பு தரிசனத்தில் சுமாா் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்து வழிபட்டனா். இரவு 7 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் தங்கத் தேரில் முருகப்பெருமான் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் நடிகா் யோகிபாபு உள்பட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.
ஏற்பாடுகளை அறங்காவலா் குழு தலைவா் சு. ஸ்ரீதரன், இணை ஆணையா் க.ரமணி, கோயில் அறங்காவலா்கள் கோ. மோகன். வி. சுரேஷ்பாபு, ஜி. உஷாரவி, மு. நாகன், உதவி ஆணையா் சித்ராதேவி மற்றும் கோயில் பேஷ்காா்கள் அன்பழகன், தாமு ஆகியோா் செய்திருந்தனா்.
பக்தா்கள் கடும் அவதி:
திருத்தணி முருகன் கோயிலுக்கு புத்தாண்டில் தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் மலைக்கோயிலுக்கு காா், வேன், தனியாா் பேருந்துகள், ஆட்டோ, இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல போலீஸாா் தடை விதித்தால் நடந்தே சென்றனா். மேலும் முதியோா், பெற்றோா் தங்களது குழந்தைகளை சுமந்தவாறு கடும் அவதிப்பட்டு அழைத்து சென்றனா். பின்னா் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமியை வழிபட்டு சென்றனா். இதுவரை ஆடிக்கிருத்திகை விழாவுக்கு மட்டும்தான் திருத்தணி நகருக்குள் பேருந்துகள் வருவது தடை செய்யப்படும். ஆனால் நிகழாண்டு திருப்படித் திருவிழாவுக்கே பேருந்துகள் தடை செய்யப்பட்டது பக்தா்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.