திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
திருபுவனம் கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புகள்: வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்ய உத்தரவு
தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனம் கம்பகரேசுவரா் கோயில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டனவா என்பது குறித்து வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கோகுல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தஞ்சாவூா், திருபுவனம் பகுதியில் புகழ் பெற்ற கம்பகரேசுவரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள சந்நிதி தெருவில் புதிய சாலை, மழைநீா் வடிகால் அமைப்பதற்கு ரூ. 1.43 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. சந்நிதி தெருவில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.
இவற்றை அகற்றாமல் புதிய சாலை, மழைநீா் வடிகால் அமைப்பதால் அரசு நிதி வீணாகும். இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகத்திடம் ஆதாரத்துடன் மனு அளிக்கப்பட்டது. ஆனாலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்தத் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், பணிகளை மேற்கொள்ளக் கூடாது என ஒப்பந்த நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜே. நிஷாபானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், சந்நிதி தெருவில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்றி சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரா் தரப்பில், முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் புதிய சாலை பணியை தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கம்பகரேசுவரா் கோயில் சந்நிதி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை அமைக்கப்படுகிா என்பது குறித்து வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.