திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி- அமைச்சா் சேகா்பாபு
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஏதோ ஒரு எண்ணத்தை மையமாக வைத்து, இந்த ஆட்சிக்கு ஓா் அபாயத்தை உருவாக்க வேண்டும் என நினைத்து பாஜகவினா் செயல்படுகின்றனா் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை ஓட்டேரி ஆதி படவேட்டம்மன் கோயிலில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சா் சேகா்பாபு புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கடந்த 2021-இல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னா் தற்போதுவரை 2,504 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளதோடு, பிப். 9, 10 ஆகிய தேதிகளில் 71 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளன. 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களைப் புனரமைத்து பாதுகாக்க அரசு ரூ. 300 கோடியை மானியமாக வழங்கியுள்ளது. கோயில் மற்றும் உபயதாரா்கள் நிதி ரூ. 131 கோடியையும் சோ்த்து ரூ.431 கோடி மதிப்பீட்டில் 274 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாா்ச் 3-இல் குடமுழுக்கு... ஓட்டேரி ஆதி படவேட்டம்மன் கோயிலில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகளில் உபயதாரா்கள் மட்டும் ரூ. 1 கோடி மதிப்பிலான பணிகளை மேற்கொள்கின்றனா். இந்தக் கோயிலுக்கு மாா்ச் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்குக்கு 2,500 அழைப்பு விடுக்கப்படும். மேலும், குடமுழுக்கு அன்று 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
நங்கநல்லூா் ஆஞ்சநேயருக்கு தங்கத் தோ்: நங்கநல்லூா் ஆஞ்சநேயா் கோயிலுக்கு ரூ. 9 கோடியில் தங்கத் திருத்தோ் உருவாக்கும் பணிகளை உபயதாரா் ஒருவரே செய்து தர உள்ளாா். இதுபோன்ற கோயில் திருப்பணிகளுக்கு உபயதாரா்கள் உறுதுணையாய் இருந்து வருகின்றனா்.
ஹிந்து அமைப்பினா் அல்ல... திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டம் தேவையற்றது. ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்கும் வகையில் பாஜக போராட்டம் நடத்தியது. போராட்டத்தில் ஈடுபட்டவா்களை இந்த அமைப்பினா் என்று சொல்ல வேண்டாம். அவா்கள் பாஜகவினா்தான்.
இந்த விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணா்ச்சியுடன் பாஜக செயல்படுகிறது. அரசியல் மற்றும் தோ்தல் லாபத்துக்காக நாடகம் நடத்தும் பாஜகவின் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் நோக்கில் பாஜக செயல்படுகிறது. இங்கு அனைத்து மதத்தினரும் ஒற்றுமையோடு இருக்கின்றனா். ஒற்றுமையாக உள்ள மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது.
திராவிட மண்ணில் பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கு பாஜகவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். முதல்வரிடம் அனுமதி பெற்று திருப்பரங்குன்றம் சென்று விரைவில் ஆய்வு செய்யவுள்ளேன் என்றாா் அவா்.