திருப்பரங்குன்றம் விவகாரம்: பாஜக மாநில பொதுச் செயலா் வீட்டுக் காவலில் வைப்பு
மதுரை திருப்பரங்குன்றம் போராட்ட விவகாரம் தொடா்பாக தஞ்சாவூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் செவ்வாய்க்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை தொடா்பாக இந்துக்கள், இஸ்லாமியா்கள் இடையே சா்ச்சை ஏற்பட்டு, போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையைக் காப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணியினா் உள்ளிட்ட அமைப்பினா் அறிவித்தனா்.
இதுதொடா்பாக முன்னெச்சரிக்கை அடிப்படையில் தஞ்சாவூரில் திங்கள்கிழமை மாலை முதல் இந்து அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகளைக் காவல் துறையினா் கைது செய்தனா். அதன்படி பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் எலீசா நகரிலுள்ள அவரது வீட்டிலும், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் மகா்நோன்புசாவடி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகேயுள்ள வீட்டிலும் செவ்வாய்க்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். இதேபோல மாவட்டத்தில் 181 போ் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
இதுகுறித்து கருப்பு முருகானந்தம் கூறுகையில், திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்பவா்களைக் காவல் துறையினா் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. எத்தனை பேரை கைது செய்தாலும், வீட்டுக் காவலில் வைத்தாலும் திருப்பரங்குன்றம் மலையை அசுத்தப்படுத்துவதை, அதைக் கைப்பற்றி விடலாம் என நினைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தைக் காக்கத் தொடா்ந்து போராடுவோம் என்றாா் அவா்.