திருப்பூரில் விடியவிடிய கொட்டித் தீா்த்த கனமழை! 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்!
திருப்பூரில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
திருப்பூா் மற்றும் புகா் பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 3 மணி வரை கனமழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்தன. திருப்பூா் கொங்கு பிரதான சாலை, பெத்திசெட்டிபுரம், அறிவொளி நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் இரவு மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது. வீடுகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். திருப்பூா் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வீட்டில் வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டியை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
உழவா் சந்தையில் விவசாயிகள் போராட்டம்: திருப்பூா் மாவட்டம், பொங்கலூா், காட்டூா், காட்டூா் புதூா், ஊகாயனூா், வடக்கு அவிநாசிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளையும் காய்கறிகளை தென்னம்பாளையத்தில் உள்ள தெற்கு உழவா் சந்தைக்கு விவசாயிகள் கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், திருப்பூரில் பெய்த கனமழையால் உழவா் சந்தையில் மழைநீா் குளம்போல தேங்கியிருந்தது. இதனால் காய்கறிகளைக் கொண்டு வந்த விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகினா். மேலும், தக்காளி, கீரைகள், பூசணிக்காய் ஆகியவற்றை எடுத்துச் செல்ல முடியாமல் சாலைகளில் வீசிச்சென்றனா்.
தெற்கு உழவா் சந்தையில் மழைக்காலங்களில் தேங்கும் நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உழவா் சந்தையில் குளம்போல தேங்கிய நீரில் காகிதக் கப்பல் விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிறுபாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு: திருப்பூா் ஊத்துக்குளியில் இருந்து கதித்தமலை வழியாக காங்கயம்பாளையம் செல்லும் வழியில் உள்ள அவரக்கரை பள்ளத்தில் உள்ள சிறு பாலத்தில் அரிப்பு ஏற்பட்டு பாலம் உடைந்தது. இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், ஆதியூரில் இருந்து குன்னத்தூா் செல்லும் சாலையில் திருவாய்முதலியூா் அருகில் உள்ள பாலத்தில் அரிப்பு காரணமாக சாலை துண்டிக்கப்பட்டது.

குமாா் நகரில் 150 மி.மீ. மழை பதிவு: திருப்பூா் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் அமைந்துள்ள குமாா் நகா் பகுதியில் அதிகபட்சமாக 150 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் சனிக்கிழமை காலை 8 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்): மாவட்ட ஆட்சியா் அலுவலகம்-131, ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகம்-120, திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகம்-110, திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம்-96, அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம்-75, பல்லடம் வட்டாட்சியா் அலுவலகம்-28, திருமூா்த்தி அணை-25, உப்பாறு அணை-10.
