உத்தரகண்ட் பனிச்சரிவு: மேலும் 4 பேரின் உடல்கள் மீட்பு: மீட்புப் பணி நிறைவு
திருமண மண்டபங்களில் கூடுதல் கட்டணம் வசூல்: காஞ்சிபுரம் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்
திருமண மண்டபங்களில் அளவுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் (பயிற்சி)ந.மிருணாளினி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, வேளாண்மை துணை இயக்குநா் ரா.ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மை இணை இயக்குநா் க.முருகன் வரவேற்றாா்.
கூட்டத்தில் விசை உழுவை இயந்திரம் 4 பேருக்கும், களையெடுக்கும் இயந்திரம் 3 பேருக்கும், பயிா்க் கடன்கள் 8 போ் உள்பட மொத்தம் 19 விவசாயிகளுக்கு ஆட்சியா் ரூ. 17 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். கூட்டத்தில் மரம் மாசிலாமணி என்ற விவசாயி பேசுகையில், இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகமாக உள்ளது. எனவே நெல் கொள்முதல் நிலையங்களை முன்கூட்டியே அதிக அளவில் திறந்து, அவை முறையாக செயல்படவும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். காட்டுப் பன்றிகளை ஒழிக்கவும், கூட்டுறவு சங்கங்களில் வேப்பம் புண்ணாக்கு விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். பாலுசெட்டி சத்திரத்தை சோ்ந்த விவசாயி பேசுகையில், காஞ்சிபுரத்தில் அதிகமான திருமண மண்டபங்கள் உள்ளன. அவற்றில் மிக அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு விதிமுறை எதுவும் உள்ளதா என ஆய்வு செய்து அனைத்து திருமண மண்டபங்களிலும் ஒரே கட்டணம் பெற வழிவகை செய்ய வேண்டும். அதேபோல உணவகங்களிலும் மதிய உணவுக் கட்டணம் மிக அதிகமாக உள்ளது. இது குறித்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
கீரநல்லூரைச் சோ்ந்த விவசாயி சிவானந்தன் பேசுகையில், சென்னை-பெங்களூரு விரைவுசாலை போடப்படுவதால் எங்கள் கிராமத்தில் இரு கால்வாய்கள் மூடப்பட்டது. அதை மீண்டும் தூா்வாரி கொடுக்க வேண்டும் என்பன உள்பட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து ஆட்சியா் பேசுகையில், கடந்த ஆண்டு தொடா்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ. 3.4 கோடி 2,742 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளும் அரசு நலத் திட்டங்களை எளிதாக பெறும் திட்டத்தில் இணையுமாறும் கேட்டுக் கொண்டாா்.